LATEST NEWS
“உனக்கு எப்படி வந்தது ரூ.534.90 கோடி சொத்து..?” அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ரகசியத்தை உடைத்த அதிமுக.. பரபரப்பில் அரசியல் களம்..!!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் குறித்து அவதூறு பரப்பியதாக தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் வாயிலாகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் பதவியேற்ற பிறகு கழகத்தின் சொத்துகளும் வங்கி இருப்புகளும் உயர்ந்துள்ளனவே தவிர குறையவில்லை என்று குறிப்பிட்டுள்ள அ.தி.மு.க., சத்துணவுப் பணியாளரின் மகனான “எளிய மனிதர்” ஆதவ் அர்ஜுனாவுக்கு 2026 தேர்தல் பிரமாணப் பத்திரப்படி ரூ. 534.90 கோடி சொத்து வந்தது எப்படி என்றும், இது தன் மாமனாரின் சொத்தை அபகரித்து வந்ததா என்றும் பொதுவெளியில் விளக்குமாறு சவால் விடுத்துள்ளது.
மேலும், தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளின் சுதந்திர முடிவுகளை மதிக்கும் பக்குவம் தங்களுக்கு இருப்பதாகவும், ஆனால் தன் கூட்டணிக் கட்சிகளை கிஞ்சிற்றும் மதிக்காமல் நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஒரு தலைவரைத் தாங்கிப் பிடிக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கு அ.தி.மு.க.வின் கூட்டணிக் கொள்கைகளைப் பற்றிப் பேச எந்த தார்மீக அருகதையும் இல்லை என்றும் சாடியுள்ளது. தி.மு.க.வின் தயவால் வென்ற எம்.எல்.ஏ-க்களை இரவல் பெற்று நாட்களைக் கடத்தும் த.வெ.க. (TVK), தொண்டர்களின் உழைப்பை மூலதனமாகக் கொண்டு தனித்து நின்று வெல்லும் திராணி கொண்ட அ.தி.மு.க.வை விவாதிப்பது முற்றிலும் வேடிக்கையானது என்றும் அக்கட்சித் தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
