CRIME
“எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைங்க…” 250 அடி செல்போன் டவரில் ஏறி இளைஞர் செய்த பகீர் காரியம்.. கடைசியில் 18 வயது நண்பன் செய்த மேஜிக்..!!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள செல்போன் டவரில், வடக்குத்திட்டை பகுதியைச் சேர்ந்த இளமாறன் (19) என்ற இளைஞர் மதுபோதையில் ஏறியுள்ளார். சுமார் 250 அடி உயரத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்து கீழே இறங்க மறுத்துப் பிடிவாதம் பிடித்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து மூன்று துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டவரின் உச்சியில் இருந்த இளமாறனைப் பத்திரமாகக் கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறையினர் டவரில் ஏறி இளமாறனை மீட்க முயன்றபோது, அவர் கீழே குதித்துவிடுவேன் என மிரட்டியதால் அதிகாரிகள் பின்வாங்கி கீழே இறங்கினர். தொடர்ந்து செல்போன் மூலமாகத் தொடர்புகொண்டு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (18) என்ற இளைஞரை அதிகாரிகள் டவரின் மீது ஏற்றிப் பேச்சுவார்த்தை நடத்தச் செய்தனர். ஆகாஷ் தொடர்ந்து பேசி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, அதிகாலை 2 மணியளவில் இளமாறன் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டார்.
கீழே இறங்கிய இளமாறனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான் காதலித்து வருவதாகவும், அந்தப் பெண் தன்னிடம் சரியாகப் பேசாததால் மனமுடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வைங்க” எனக் கோரிக்கை வைத்தே டவரில் ஏறியதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, இளமாறனுக்கு அறிவுரை கூறி எச்சரித்த அதிகாரிகள், அவரைப் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். காதல் விவகாரத்தால் நள்ளிரவு முழுவதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
