LATEST NEWS
உஷார்..! துவரம் பருப்பு, உளுந்து, அரிசியை பதுக்கினால் இனி ஜெயில் தான் பாத்துக்கங்க.. தமிழக அரசின் அதிரடி எச்சரிக்கை..!!
தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், செயற்கையான தட்டுப்பாடு மற்றும் பதுக்கலைத் தடுக்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, துவரம் பருப்பு, உளுந்து, நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை இருப்பு வைப்பதற்கான புதிய உச்சவரம்புகளைக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுடன் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, வரும் ஜனவரி 31, 2027 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, பருப்பு வகைகளைப் பொறுத்தவரை மொத்த வியாபாரிகள் தலா 200 மெட்ரிக் டன் வரையிலும், சில்லறை வியாபாரிகள் தலா 5 மெட்ரிக் டன் வரையிலும் மட்டுமே இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரிய சங்கிலித் தொடர் கடைகள் ஒவ்வொரு கிளையிலும் 5 மெட்ரிக் டன்னும், கிடங்குகளில் 200 மெட்ரிக் டன்னும் வைத்திருக்கலாம். அதேபோல், இறக்குமதியாளர்கள் சுங்க அனுமதி பெற்ற 45 நாட்களுக்கு மேல் சரக்குகளைத் தேக்கி வைக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அரிசி மற்றும் நெல் இருப்பைப் பொறுத்தவரை, மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் வரையிலும், சில்லறை வியாபாரிகள் ஒரு கடைக்கு 8 மெட்ரிக் டன் வரையிலும் மட்டுமே வைத்திருக்க முடியும். மில் உரிமையாளர்கள் ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு மிகாமலும், இறக்குமதியாளர்கள் 45 நாட்களுக்கு மிகாமலும் இருப்பு வைக்க வேண்டும். இந்த வரம்புகளை மீறிப் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
