LATEST NEWS
குஷியோ குஷி..! 8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை… மணப்பெண்களுக்கு ‘அண்ணன் சீர்’ தந்த தமிழக அரசு..! முக்கிய அரசாணை வெளியீடு..!!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதியில் அளித்த ‘அண்ணன் சீர்’ திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண்களின் திருமண நாளில், தமிழக அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை அண்ணன் சீராக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிக்கையில், “திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணம். அந்தத் தருணத்தில், ஒரு அண்ணனாக அரசே உடனிருந்து மணப்பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்தைத் தொய்வின்றிச் செயல்படுத்துவதற்காகவே ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் 22 காரட் தரத்திலான 8 கிராம் தங்க நாணயம் (1 பவுன்) மற்றும் ஒரு உயர்தர பட்டுப் புடவை வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். இத்திட்டத்திற்காக விரைவில் பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசாணை வெளியான நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
