LATEST NEWS
Gen-Z தலைமுறையின் அடிமடியில் கை வைக்க விஜய்க்கு துணிச்சல் எப்படி வந்தது..? இப்படியொரு முதல்வரை பெற்றிருப்பது நம் சாபக்கேடு… மாஜி அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பரபரப்பு வீடியோ..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட வீடியோ பதிவில், ஒரு நாட்டின் ஜனநாயக அடிப்படை உரிமை என்பது போராட்டக்களங்கள்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும்போது போராட்டமே தீர்வாக அமைந்த வரலாற்றை மடைமாற்றம் செய்யும் வகையில், அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்ததைச் சுட்டிக்காட்டினார். இந்த உத்தரவுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி, மொழி, காவிரி மற்றும் பெரியாறு ஆறுகள் தொடர்பான உரிமைப் பிரச்சனைகள், தமிழ் இனம், தமிழ் மண், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அதிகார மையம் பறிக்கும்போதெல்லாம், இளைய மாணவ சமுதாயம் கிளர்ந்தெழுந்து போராடி அதிகார மையத்தை அடிபணிய வைத்த வரலாற்றை அவர் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜென்-ஸி தலைமுறையின் உரிமைகளில் கைவைக்கும் துணிச்சல் எவ்வாறு வந்தது என்று கேள்வி எழுப்பினார். மக்களின் உரிமைக்கான போராட்டங்களிலோ அல்லது பட்டினிப் போராட்டங்களிலோ பங்கெடுக்காததால் தான், இளைஞர்கள் போராடக் கூடாது என்ற ஜனநாயக விரோத உத்தரவைப் பிறப்பிக்கும் துணிச்சல் வந்ததாகக் சாடினார். போராட்டக் களங்களைச் சந்திக்காத, புரிந்து கொள்ளாத ஒருவரைப் பெற்றிருப்பது மாநிலத்தின் சாபக்கேடு என்றும், வசீகர வசனங்களால் தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்றும் விமர்சித்தார்.
மேலும், ஓர் உத்தரவை அறிவித்துவிட்டு உடனடியாகத் திரும்பப் பெறுவது என்ன நடைமுறை என்று வினவிய அவர், உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக அதன் சாதக, பாதகங்களையும் விளைவுகளையும் ஆராயவில்லையா என்று கேள்வி எழுப்பினார். அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் மனநிலையை ஆழம் பார்ப்பதும், எதிர்ப்பு எழுந்தவுடன் அதை ரத்து செய்வதும்தான் அரசின் செயல்பாடாக உள்ளது என்றும், இதுவே அவர்களின் 100 நாள் சாதனை என்றும் தனது வீடியோ பதிவில் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
