LATEST NEWS
ஐயா..! அந்த பைலை ஜோசியக்காரன் சொன்னா தான் திறப்பீங்களா..? இல்ல நல்ல நேரம் ஏதும் பார்க்கணுமா..? உடனே திறங்களேன்… விஜய்க்கு உதயநிதி சரமாரி கேள்வி..!!
“எங்களிடம் 3 ஃபைல்கள் உள்ளன; அதை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள் என முதல்வர் விஜய் கூறுகிறார். தயவுசெய்து அந்த ஃபைல்களை உடனே திறந்து பார்த்து நடவடிக்கை எடுங்கள். எதற்காகப் பயந்து 3 மாதங்களாகக் காலம் தாழ்த்துகிறீர்கள்?” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் காட்டமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், “ஃபைலைத் திறக்க ஏதேனும் ஜோசியக்காரன் சொன்னால்தான் திறப்பீர்களா? அல்லது நல்ல நேரம் ஏதும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்றும் அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.
சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய இந்தக் கேள்வியைத் தொடர்ந்து அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான வாக்குவாதம் வெடித்தது. இந்தச் சூழலில், ஜோசியக்காரன் என்ற தனிநபர் சார்ந்த வார்த்தையைச் சட்டமன்றக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே திமுக மற்றும் தவெக இடையே கோப்புகள் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இந்த நேரடிச் சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் ஆஸ்தான ஜோதிடர் குறித்த செய்திகள் வெளியான அடுத்த நாளே சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
