LATEST NEWS
“யார் தயவிலும் நாங்க ஆட்சி நடத்தல..!” ஸ்டாலினுக்கு சாட்டையடி பதில் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்.. அனல் பறக்கும் அரசியல் களம்..!!
எங்களுடைய தயவில்தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு, “நாங்கள் யாருடைய தயவிலும் ஆட்சி நடத்தவில்லை, மக்களின் தயவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது” என்று த.வெ.க. அரசின் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடம் தி.மு.க. எப்போதும் ஒரு பண்ணையார் மனப்பான்மையுடன்தான் நடந்து கொண்டது என்று சாடிய அவர், கடந்த காலங்களில் தி.மு.க. வெறும் 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட ஆட்சி அமைத்ததைச் சுட்டிக்காட்டி, அப்போது யாருடைய தயவில் ஆட்சி நடந்தது என்று கேள்வி எழுப்பினார். த.வெ.க. அரசு சாமானிய மக்கள், பெண்கள் மற்றும் வாக்காளர்களின் தயவினால் மட்டுமே ஆட்சி அமைத்துள்ளது என்றும், எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்பதைத் தங்களது முதலமைச்சர் ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளதாகவும், அதன்படியே அவர் செய்துகாட்டியுள்ளார் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். தி.மு.க. தலைவரின் விமர்சனங்களை முற்றிலுமாக நிராகரித்த அவர், த.வெ.க. ஆட்சி மக்களின் பேராதரவோடு கம்பீரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் தயவும் தங்களுக்குத் தேவை இல்லை என்றும் தங்களின் நிலைப்பாட்டை ஆணித்தரமாகப் பதிவு செய்தார். த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள இந்த நேருக்கு நேர் அரசியல் மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
