LATEST NEWS
அடக்கடவுளே..! ஐடி வேலையை விட்டுட்டு அரசு வேலைக்கு ஓடிய இளைஞர்… 12-வது சுற்றில் சுருண்டு விழுந்து பரிதாப பலி… கதறும் குடும்பம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ஹோம்கார்ட் ஆள்சேர்ப்புக்கான உடற்தகுதி ஓட்டப் பந்தயத்தின் போது, பரேலியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான சிவம் யாதவ் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த சிவமுக்கு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை கிடைத்தபோதிலும், வீட்டிற்கு அருகில் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவோடு அந்த வேலையைத் துறந்தார். தொடர்ந்து அரசுப் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த அவர், ரயில்வே லோகோ பைலட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதன் இறுதி முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், இந்த ஹோம்கார்ட் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார்.
ஓட்டப் பந்தயத்தின் போது 11 சுற்றுகளை வெற்றிகரமாகக் கடந்த சிவம் யாதவ், 12-வது சுற்றின் போது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சிவமின் குடும்பம் மிகவும் படித்த பின்னணியைக் கொண்டது; அவரது தந்தை வினோத் யாதவ் வழக்கறிஞராகவும், தாய் மம்தா யாதவ் முன்னாள் சிக்ஷாமிக்த்ராவாகவும் உள்ளனர். பத்தாம் வகுப்பில் 85% மற்றும் பிளஸ் டூவில் 90% மதிப்பெண்கள் பெற்ற திறமைசாலியான சிவமுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் குறித்துப் பேசிய தடகளப் பயிற்சியாளர்கள், முறையான பயிற்சி மற்றும் தயாரிப்புகள் இன்றி திடீரென இதுபோன்ற தீவிர ஓட்டப் பந்தயங்களில் இளைஞர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
சிவமின் குடும்பத்தில் அரசுப் பணி பயிற்சியின் போது ஏற்படும் இரண்டாவது சோகம் இதுவாகும். முன்னதாக, ரயில்வே துறையில் பொறியியல் டிப்ளமோ முடித்து பயிற்சியில் இருந்த சிவமின் தாத்தா ராஜேந்திர சிங், பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தார். தாத்தாவின் மறைவுக்குப் பிறகும் அரசு வேலை கனவை விடாமல் துரத்திய சிவம், தனியார் துறையில் நல்ல எதிர்காலம் இருந்தும் அரசுப் பணிக்காக முயன்று இறுதியில் தன் உயிரையே இழந்துள்ளார். சிவமின் இந்த எதிர்பாராத மறைவு அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
