LATEST NEWS
“அடப்பாவிகளா.. புலி முன்னாடி போயா இந்த அலப்பறை பண்ணுவீங்க..?!” சின்னதா பிசகியிருந்தாலும் சோலி முடிஞ்சிருக்கும்..! தடோபாவில் இணையத்தை அலறவிட்ட பகீர் சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சந்திராபூர் – மோஹர்லி சாலையில் வழக்கம்போல வாகனப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கம்பீரமான புலி ஒன்று திடீரெனச் சாலையின் நடுவே வந்து நின்றது. இதைக் கண்டதும் வாகனங்களுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் தங்களது உயிரைப் பற்றிய அச்சமின்றிச் செய்த காரியங்கள் இணையவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளன.
சரணாலயக் கட்டணம் ஏதுமின்றி “இலவசமாகவே” புலி கண்ணெதிரே காட்சியளித்த உற்சாகத்தில், அங்கிருந்த சிலர் தாங்கள் பயணித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை விட்டுத் திடீரெனக் கீழே இறங்கினர். வனத்துறை விதிகளை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டு, புலியின் மிக அருகில் சென்று செல்ஃபி எடுப்பதற்கும், செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு பெரும் கூச்சலிட்டனர். காட்டு விலங்கின் அருகாமையில் நின்று கொண்டு அவர்கள் செய்த இந்த ஆபத்தான அலப்பறை, வன உயிரின ஆர்வலர்களையும் பொதுமக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சற்று பிசகியிருந்தாலும் அந்த வனவிலங்கு ஆக்ரோஷமடைந்து பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தடோபா வனத்துறை நிர்வாகம் உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. வனப்பகுதிச் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதோ, கீழே இறங்குவதோ சட்டப்படி குற்றமாகும். ஏற்கெனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கி, வாகன பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
