LATEST NEWS
உஷார்..! லாரியில் இருந்து விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில்… தொழிலாளி உடல் சிதறி பலி, 4 பேர் படுகாயம்..!!
தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா தொழிற்பேட்டை பகுதி-1 இல் உள்ள D-23 வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘எஸ்.எம். டிரேடர்ஸ்’ என்ற நிறுவனத்தின் கிடங்கிற்கு வெளியே, புதன்கிழமை காலை 10:43 மணியளவில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. காசியாபாத்தில் இருந்து கமர்ஷியல் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் வழக்கம்போல கிடங்கிற்கு வந்தது. ஊழியர்கள் வாகனத்தில் இருந்து சிலிண்டர்களை கீழே இறக்கி உள்ளே வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தது. விழுந்த அடுத்த கணமே அது மிகக் கொடூரமான சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த பயங்கர வெடி விபத்தில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மோஹித் சிங் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். மேலும், அவருடன் பணியில் இருந்த உமேஷ், அரவிந்த், மனோஜ் மற்றும் பங்கஜ் ஆகிய நான்கு ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் 5 தீயணைப்பு வாகனங்கள், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக எய்ம்ஸ் டிரான்மா சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ‘எஸ்.எம். டிரேடர்ஸ்’ நிறுவனம் கடந்த 1-2 ஆண்டுகளாக இந்த இடத்தைச் வாடகைக்கு எடுத்து தொழிற்பேட்டை ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி விநியோகிக்கும் வணிகத்தை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இங்கு சிலிண்டர்களை நிரப்பும் வசதி இல்லை; காசியாபாத்தில் இருந்து நிரப்பப்பட்டு வரும் சிலிண்டர்களை வாங்கி, உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளனர். தற்போது த தடயவியல் குழுவினர் விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முறையான உரிமங்கள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இச்சேவை நடைபெற்றதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
