LATEST NEWS
“கேக் வெட்டும் முன் நேர்ந்த கொடூரம்..” பிறந்தநாள் பார்ட்டிக்காக திருட்டுத்தனமாக இழுக்கப்பட்ட மின்சார ஒயர் பட்டு முதியவர் பரிதாப மரணம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் தாணே, சாஸ்திரிநகர் பகுதியில் பிறந்தநாள் விழாவிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் ஏற்பட்ட மின்சாரத் தாக்குதலில் 66 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பிறந்தநாள் விழாவிற்காக அமைக்கப்பட்ட மேடைக்கும் மின்விளக்குகளுக்கும் தெருவிளக்கு கம்பத்தில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக வயர் மூலம் மின்சாரம் எடுக்கப்பட்டதே இந்த விபத்திற்கு காரணமாக அமைந்தது.
சாஸ்திரிநகர் பஸ் ஸ்டாப் எண் 8 அருகில் ஹர்ஷல் சவுத்ரி என்பவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகப் பொதுச் சாலையில் மேடை அமைத்திருந்தார். மேடைக்குத் தேவையான மின்சாரத்திற்காகத் தெருவிளக்குக் கம்பத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வயர் இழுக்கப்பட்டு, அது சாலையிலேயே போடப்பட்டிருந்தது. அச்சமயத்தில் அப்பகுதி வழியாகத் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த சுவர்ணா டோங்ரே என்ற 66 வயது பெண், சாலையில் கிடந்த அந்த மின்சார வயரின் மீது தெரியாமல் கால் வைத்தார்.
மின்சாரம் பாய்ந்ததில் பலத்த அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றபோதிலும், மின்சாரத் தாக்குதலின் வீரியம் அதிகமாக இருந்ததால் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் மகன் ஆனந்த் டோங்ரே அளித்த புகாரின் பேரில், வர்தக்நகர் காவல்துறையினர் பிறந்தநாள் விழா ஏற்பாட்டாளரான ஹர்ஷல் சவுத்ரி மீது வழக்குப் பதிவு செய்து, விதிகளை மீறி மின்சாரம் எடுத்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
