CRIME
“இது என்ன கூத்து.. நர்சிங் சான்றிதழ் வாங்கிய ‘கழுதை’..” அரசு மருத்துவத் துறையின் மெகா பித்தலாட்டம்.. பகீர் பின்னணி…!!
மத்திய பிரதேச மாநிலத்தில் செவிலியர் பதிவு கவுன்சிலின் ஆன்லைன் பதிவு முறையில் நிலவி வரும் மிக மோசமான குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக, இந்திய தேசிய மாணவர் அமைப்பின் மாநில துணைத் தலைவர் ரவி பர்மர் களத்தில் இறங்கி ஒரு அதிரடியான விசித்திரமான சோதனை முயற்சியை மேற்கொண்டார். அந்தப் போர்ட்டலின் பாதுகாப்புத் தன்மையைச் சோதிக்க விரும்பிய அவர், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைத் திறந்து அதில் கேட்கப்பட்டிருந்த விபரங்களுக்கு முற்றிலும் போலியான மற்றும் விசித்திரமான பதில்களைப் பதிவு செய்தார். விண்ணப்பதாரரின் பெயர் இருக்கும் இடத்தில் ‘கழுதை’ என்றும், தந்தையின் பெயர் ‘கழுதை தந்தை’ என்றும், தாயின் பெயர் ‘கழுதை தாய்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சாதி என்ற இடத்தில் ‘விலங்கு’ என்றும், முகவரிக்கு ‘கிடைக்கும் இடமெல்லாம்’ என்றும் மிக விசித்திரமாகப் பதிவிட்டுள்ளார்.
இவற்றுடன் நிறுத்தாமல், விண்ணப்பதாரரின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில் ஒரு நிஜக் கழுதையின் புகைப்படத்தையும், கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டிய இடத்தில் வெறும் வெற்றுத் தாள்களை மட்டுமே ரவி பர்மர் இணைத்துள்ளார். அதன் பின்னர், விண்ணப்பத்திற்கான உரிய கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகச் செலுத்தியுள்ளார். வியப்பூட்டும் விதமாக, எந்தவொரு அடிப்படை ஆவணச் சரிபார்ப்போ அல்லது மனிதத் தலையீடோ இல்லாத அந்தத் தானியங்கி ஆன்லைன் அமைப்பு, இந்த போலியான விபரங்களை உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளது. விண்ணப்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே ‘Donkey MPNRC’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் செவிலியர் பதிவுச் சான்றிதழையும் (Digital Nursing Registration Certificate) அந்த போர்ட்டல் வெற்றிகரமாக உருவாக்கி வழங்கியுள்ளது.
கழுதைக்குச் செவிலியர் சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த விவகாரம் மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த மருத்துவத் துறையிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனித உயிர்களோடு விளையாடும் மருத்துவப் பதிவு முறையில் நிலவும் ஆகப்பெரும் பாதுகாப்பு ஓட்டைகளையும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும் இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து, அம்மாநில அரசு செவிலியர் கவுன்சிலின் ஆன்லைன் பதிவுகளைத் தற்காலிகமாக உடனடியாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தத் தொழில்நுட்பக் குளறுபடி மற்றும் அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
