CRIME
“அடச்சீ.. யார்கிட்டயாச்சும் சொன்னா உன் அம்மாவைக் கொன்னுடுவேன்…” 14 வயது சிறுமியை மிரட்டி சீரழித்த லேப் ஊழியர்.. மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்..!!
பீகாரின் பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (GMCH) அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைப் பராமரித்து வந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆய்வகப் பணியாளர் ரவி ரஞ்சன் என்பவர், சிறுமியின் தாயாருக்குச் சிறந்த சிகிச்சை அளிப்பதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்று இக்கொடூரத்தைச் செய்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு, “இதைப்பற்றி யாரிடமாவது கூறினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உனது தாயாரைக் கொன்றுவிடுவேன்” என்று குற்றவாளி அச்சிறுமியை மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி நீண்ட நேரமாக அமைதியாக இருந்துள்ளார். பின்னர், மருத்துவமனைக்கு வந்த தனது பாட்டியிடம் நடந்த விவரங்களைக் கூறியதை அடுத்து, குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 65(1) மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை 4 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணைப் பொறுப்பு பெண் காவல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, தடய அறிவியல் சான்றுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்ற விசாரணையின் மூலம் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசு மருத்துவமனையின் பாதுகாப்புப் பராமரிப்பு மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் பின்னணி சரிபார்ப்பு குறித்த தீவிரமான கேள்விகளையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
