CRIME
“என்கிட்டே பேச மாட்டியா..” அதிகாலையில் வீடு புகுந்து கள்ளகாதலனின் வெறிச்செயல்.. இரத்த வெள்ளத்தில் துடித்த இளம்பெண்.. மாங்காடு அருகே அதிர்ச்சி!
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில், கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த கஸ்தூரி (32) என்ற பெண்ணை, பழக்கத்தை நிறுத்திய ஆத்திரத்தில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்திய சம்பத் (38) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் டைல்ஸ் வேலை செய்து வந்த சம்பத்திற்கும் கஸ்தூரிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாக சம்பத்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் கஸ்தூரி அவருடன் பேசுவதைத் தவிர்த்துப் பழக்கத்தைத் துண்டித்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த சம்பத், நேற்று (நவம்பர் 12) அதிகாலை நேரத்தில் கஸ்தூரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரைத் தாக்கியதோடு மார்புப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். கஸ்தூரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மாங்காடு காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சம்பத்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
