LATEST NEWS
இதுதான் நீங்க வேலை செஞ்ச லட்சணமா..? மீண்டும் சர்ச்சையில் சென்னை மேயர் பிரியா.. மூடப்படாத வடிகால் பள்ளத்தில் இளைஞர் உயிரிழந்ததால் வெடிக்கும் விமர்சனங்கள்..!!
சென்னை அம்பத்தூரில் மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவைச் சமூக வலைதளங்களில் விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியாக விடப்பட்டிருந்த பள்ளமே இந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை நிறைவடைந்துவிட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்ததை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறிவிட்டு, இன்னும் பல இடங்களில் பள்ளங்கள் மூடப்படாமல் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், “இதுதான் நீங்கள் பணி செய்த லட்சணமா?” எனக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு இளைஞரின் உயிரிழப்பிற்கு வழிவகுத்துள்ள இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் மேயர் பிரியா தரப்பிலிருந்து உரிய விளக்கமோ அல்லது பதிலோ அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
