LATEST NEWS
“Sister மேயர் பிரியாவுக்கு எந்த குறையும் வைக்கமாட்டோம்” விட்டுக் கொடுக்க மாட்டோம் … அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பதில்!
மேயர் பிரியாவுக்கு தவெக அரசு எந்த ஒரு குறைபாட்டையும் ஏற்படுத்தாது என்றும், பேரிடர் போன்ற இக்கட்டான காலங்களில் அரசியல் நெறிமுறைகளைப் பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் தவெக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகைக்கு முதலமைச்சர் ஆய்வுக்காக வந்தபோது தமக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் தவெக அரசு மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தராமல் தங்களைப் புறக்கணிப்பதாகவும் மேயர் பிரியா குற்றம்சாட்டியிருந்த நிலையில் அமைச்சரின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மேயர் பிரியாவை தங்களது சொந்த “சகோதரி” போன்றே கருதுவதாகவும், அவரை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், “அழைப்பு விடுத்தால்தான் வருவேன்” என்று மேயர் கூறுவது முறையல்ல என்றும்; ரிப்பன் மாளிகை என்பது மேயரின் சொந்த அலுவலகம் என்பதால், அங்கு வருவதற்கு அவருக்கு தனியாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அழைப்பும் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மழைநீரானது திமுக, அதிமுக அல்லது தவெக என எந்தவொரு அரசியல் கட்சி பாகுபாட்டையும் பார்ப்பதில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, இத்தகைய சூழல்களில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகள் மற்றும் மரபுகளைத் தாண்டி, களத்தில் இறங்கி இணைந்து செயல்பட வேண்டும் என மேயர் பிரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
