LATEST NEWS
“முதலமைச்சர் வர்றதுக்காக இரவு வரை உட்கார்ந்திருக்க முடியுமா..?” ரிப்பன் மாளிகையையே அதிரவைத்த மேயர் பிரியாவின் அதிரடி கேள்வி! ..!!
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர். பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும் போது தங்களுக்கு முறையான தகவல் கொடுக்காமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் மீது சரமாரியாகக் குற்றம் சாட்டினர். மேலும், புதிய கட்டடங்கள் திறப்பு விழாக் கல்வெட்டுகளில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறினர்.
கவுன்சிலர்களின் புகாரை அடுத்து ஆவேசமாகப் பேசிய மேயர் பிரியா, கடந்த சில மாதங்களாகவே மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான அழைப்பு வழங்கப்படுவதில்லை என்று ஒப்புக்கொண்டார். கவுன்சிலர்கள் மட்டுமின்றி மேயரான தனக்கே இந்த நிலைதான் என்று குறிப்பிட்ட அவர், “முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது கூட எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், “அரசுக்கு விருப்பமில்லை என்றால் மாநகராட்சியை கலைத்து விடுங்கள்” என்றும் அவர் மிகக் காட்டமாகப் பேசினார்.
இந்த விவகாரத்தால் மாமன்றக் கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் சமீரன் இதற்குப் பதில் அளித்து விளக்கமளித்தார். எந்தவொரு அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்காமல் கட்டாயம் அழைக்க வேண்டும் என்று ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இனிவரும் காலங்களில் அனைத்து அதிகாரிகளுக்கும் இது தொடர்பாகத் தனியாகக் கூட்டம் நடத்தி, இந்த நடைமுறை கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
