LATEST NEWS
“மீண்டும் கொளத்தூரில் நின்றால் தோல்வி நிச்சயம்” – ஸ்டாலின் கைக்குப் போன ரிப்போர்ட்… மேயர் பிரியாவுக்கு சீட் வாங்கித் தர சேகர்பாபு தீவிரம்..!!
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவையடுத்து, அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலியாக உள்ள இந்தத் தொகுதியில் தவெக சார்பில் வி.எஸ். பாபுவின் மகன் சதீஷ்குமார் வேட்பாளராகக் களமிறக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட கூட்டமும், முதல்வர் விஜய்யின் நேரடிப் பார்வையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களும் கொளத்தூரில் தவெகவின் செல்வாக்கை மேலும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, கடந்த தேர்தலில் சிட்டிங் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலினை சுமார் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ். பாபு வீழ்த்திய நிலையில், மீண்டும் கொளத்தூரில் போட்டியிட்டால் தோல்வியே கிடைக்கும் என்ற உளவுத்துறை ரிப்போர்ட் ஸ்டாலின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொளத்தூரில் வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பதாலும், ஒருவேளை மீண்டும் தோல்வியைத் தழுவினால் அது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிடும் என்பதாலும் மு.க. ஸ்டாலின் இந்த இடைத்தேர்தலைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்குப் பதிலாக அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. ஸ்டாலின் போட்டியிடாத பட்சத்தில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் புரசைவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதனைக் களமிறக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, கொளத்தூர் தொகுதியில் மேயர் பிரியாவை வேட்பாளராக நிறுத்துவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் போதே மேயர் பிரியாவுக்குச் சென்னையில் ஒரு தொகுதியைப் பெற்றுத் தர சேகர்பாபு முயன்று அது கைகூடாமல் போன நிலையில், தற்போது வரவிருக்கும் கொளத்தூர் இடைத்தேர்தலில் அவருக்கு எப்படியாவது சீட் வாங்கித் தந்துவிட வேண்டும் எனப் பல வகைகளில் காய் நகர்த்தி வருகிறார். இதனால், கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மேயர் பிரியா போட்டியிடுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
