LATEST NEWS
வீடியோ கேமில் கூட இப்படி ஆட முடியாது… 2852 பந்துகளில் 204 ரன்கள்.. 28 சிக்ஸர்கள்..! ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை உடைத்த இளம் இந்திய வீரர்..!!
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா – யுஏஇ அணிகளுக்கு இடையிலான போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார். A பட்டியல் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம், 150 ரன்கள் மற்றும் இரட்டை சதம் என அனைத்து சாதனைகளையும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அவர் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து பெரும் பசியுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக, முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக ஹர்பிரீத் சிங் பாட்டியா 120 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாகத் தொடங்கினார். வெறும் 28 பந்துகளில் 100 ரன்களைத் தொட்ட அவர், 2023-ம் ஆண்டு டாஸ்மேனியாவுக்கு எதிராகத் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 29 பந்துகளில் அடித்த அதிவேக சத சாதனையை முறியடித்தார். மேலும், 40 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தும் புதிய உலக சாதனை படைத்தார்.
அவரது பேட்டிங் வேகம் குறையாமல் சிக்சர் மழை பொழிந்த நிலையில், 12-வது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசினார். அது அந்த இன்னிங்ஸில் அவரது 24-வது சிக்ஸராக அமைந்ததோடு, ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் தன்வசப்படுத்தினார். வெறும் 52 பந்துகளில் 28 சிக்ஸர்களுடன் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்த சூர்யவன்ஷி, 204 ரன்களில் ஆட்டமிழந்தபோது அவரது ஸ்ட்ரைக் ரேட் 384.91 ஆக இருந்தது; இதுவும் ஒரு உலக சாதனையாகும். சூர்யவன்ஷி வீடியோ கேமில் கூட விளையாட முடியாதபடி அதிரடியாக ஆடியதாக இணையவாசிகள் மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.
சூர்யவன்ஷியின் இந்தச் சாதனை ஆட்டத்தால் 50 ஓவர் கொண்ட இப்போட்டியில் 14.2 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அடுத்ததாக இந்தியா A அணி வருகின்ற வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை A அணியை எதிர்கொள்கிறது; வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான அரையிறுதி நடைபெறவுள்ளது. இதனால், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
