LATEST NEWS
ஜஸ்ட் மிஸ்… டீ குடிக்கப் போன 10 நிமிஷம்… மரணத்தின் வாயிலில் இருந்து தப்பிய 5 இந்தியர்கள்…! நேபாள வெள்ளத்தில் தப்பிய ராய்பூர் நண்பர்களின் நடுக்கமூட்டும் அனுபவம்..!!
சாத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ் மற்றும் தினேஷ் சிங் தாக்குர் ஆகிய 5 நண்பர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். கடந்த ஆகஸ்ட் 26 அன்று காலை, தாடிங் மாவட்டத்தில் உள்ள மலேகு நகரில் உள்ள ஒரு விடுதியில் அவர்கள் தேநீர் அருந்துவதற்காகத் தங்களது காரை நிறுத்தினர். அவர்கள் டீ குடித்துக்கொண்டிருந்த அந்த 10 முதல் 15 நிமிட இடைவெளியில், அவர்கள் செல்லவிருந்த பாதையில் முன்னால் இருந்த பாலம் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செய்தி தெரியவந்தது. ஒருவேளை அவர்கள் தேநீர் குடிக்க நிற்காமல் 10 நிமிடங்கள் முன்பாகவே புறப்பட்டிருந்தால், வெள்ளத்தில் சிக்கியிருக்கக் கூடும் என்றும், அந்தத் தேநீர் இடைவேளையே தங்களது உயிரைக் காப்பாற்றியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
டீ குடித்த உணவகத்தின் உரிமையாளர் ஒரு இந்தியர் என்பதால், அவர்களுக்குத் தேவையான உணவையும் உதவிகளையும் வழங்கி ஆதரவளித்தார். அதன் பிறகு, திரிசூலி ஆற்றில் கார்கள், உடல்கள் மற்றும் இடிபாடுகள் அடித்துச் செல்லப்படுவதை அவர்கள் கண்முன்னே கண்டு அதிர்ச்சியடைந்தனர். நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்து, அவர்கள் மலேகு பகுதியில் சற்று உயரமான பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, தங்களின் காரிலேயே இரவைக் கழித்தனர். அங்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாதபோதும், இணைய சேவை செயல்பட்டதால் இந்திய அரசின் உதவி எண் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து தங்களது இருப்பிடத்தை உறுதிசெய்து கொண்டனர்.
அப்பகுதி உள்ளூர் மக்களும், காவல்துறையினரும் அவர்களுக்குப் பாதுகாப்பளித்து உதவிகளைச் செய்தனர். அந்தப் பதற்றமான சூழலுக்கு நடுவே, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாதுகாப்புப் படையினர், இந்த நண்பர்களின் கைகளில் ரக்ஷா பந்தன் ராக்கிகளைக் கட்டி ஆறுதல் அளித்தது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் அங்குத் தங்கியிருந்த இந்த 5 நண்பர்களும் ஆகஸ்ட் 28 அன்று நேபாளத்திலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமையன்று தங்களது சொந்த ஊரான ராய்பூருக்குப் பத்திரமாகத் திரும்பினர். தங்களைக் காப்பாற்றியது சிவபெருமானின் அருள் என்று கூறி, தாங்கள் கண்ட கோரக் காட்சிகளை வாழ்நாளில் மறக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
