LATEST NEWS
“பணத்தை எடுத்துக்கோங்க ப்ளீஸ்..” காரை மறித்து கணவரை துடிக்க துடிக்க அடித்த கும்பல்..” 10 மாத குழந்தையோடு கதறிய தாய்.. பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்..!
பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில் உள்ள மத்தூர் பகுதியில், வாகன நெரிசலில் ஏற்பட்ட ஒரு சிறிய உரசல் காரணமாக நெஞ்சைப் பதறவைக்கும் வன்முறைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சாகர் குமார் என்பவர் ஓட்டி வந்த கார் மற்றொரு வாகனத்தின் மீது தவறுதலாக மோதியதால், ஆத்திரமடைந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் அவரது காரை நடுரோட்டில் வழிமறித்துள்ளது. சாகரை காரில் இருந்து வெளியே இழுத்து அவர்கள் கடுமையாகத் தாக்கியபோது, உள்ளே இருந்த அவரது மனைவி தனது பத்து மாதக் குழந்தையைக் கையில் ஏந்தியபடி கண்ணீருடன் மன்றாடியுள்ளார். தன்னிடம் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தங்கள் உயிரை விட்டுவிடும்படி அவர் காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், கணவரைக் காப்பாற்ற குறுக்கே சென்றும் அந்த இரக்கமற்ற கும்பல் தாக்குதலை நிறுத்தவில்லை.
இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவம், அவர்களுக்குப் பின்னால் வந்த வேறொரு காரின் டேஷ்கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு சாகர் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தற்போது வரை மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நெடுஞ்சாலைகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் பொருத்த வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட சாகர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
