LATEST NEWS
கிரிக்கெட் வரலாற்றின் ஒரு சகாப்தம் முடிவு!.. கிரிக்கெட் வரலாற்றின் ‘Ultimate GOAT’ சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!!
கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகக் கொண்டாடப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் சர் கார்பீல்ட் சோபர்ஸ், தனது 89-வது வயதில் இயற்கை எய்தினார். துயரமான இந்தச் செய்தியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1936-இல் பார்படாஸில் பிறந்த சோபர்ஸ், இடது கை பேட்டிங் மேதையாகவும், அசாத்திய வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சாளராகவும், சமகாலத்தின் மிகச்சிறந்த ஃபீல்டராகவும் திகழ்ந்து, கிரிக்கெட் களத்தில் ஆல்-ரவுண்டர் என்ற சொல்லுக்கு முழுமையான இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர்.
தனது 17-வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்களுடன் 8,032 ரன்களும், பந்துவீச்சில் 235 விக்கெட்டுகளும், களத்தில் 109 கேட்சுகளும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறிப்பாக, 1958-இல் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் அடித்த 365 ரன்கள் மற்றும் 1968-இல் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை ஆகியவை கிரிக்கெட் வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை ஆகும். தனது பன்முகத் திறமையால் பல தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகமாக விளங்கிய ஒரு சகாப்தம் தற்போது நிறைவடைந்துள்ளது.
