LATEST NEWS
நாய்க்கு கூட மனிதாபிமானம் இருக்கா..? வாலிபரை வெட்ட வந்த கும்பல்.. ஆக்ரோஷமாக பாய்ந்து உயிரைக் காப்பாற்றிய தெருநாய்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
பஞ்சாப் மாநிலம் ஜாலந்தரின் காடா பகுதியில் உள்ள வால்மீகி மொஹல்லாவில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் திடீரென வன்முறையாக மாறியது. அங்கு சாலையில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு, தடிகளாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்கியது. அதன் தொடர்ச்சியாக, அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து, பலத்த காயமடைந்த அந்த இளைஞரை மீண்டும் கொடூரமாகத் தாக்க முயன்றான்.
அந்த நேரத்தில், அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு தெருநாய் பாய்ந்து வந்து தாக்குதல் நடத்தியவனை நோக்கி ஆக்ரோஷமாகக் குரைத்து எதிர்த்தது. எதிர்பாராத விதமாக நாய் தன் மீது பாய்ந்ததால் பயந்துபோன அந்த ஆயுததாரி பின்வாங்கினான். அந்த நாய் தொடர்ந்து துரத்தியதால், அவன் ஆயுதத்தை வீசியபடி அங்கிருந்து தப்பியோடினான். நாய் காட்டிய இந்த அசாத்திய துணிச்சலால், அந்த இளைஞர் பெரிய உயிர்ச் சேதத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். இந்த நெஞ்சை பதறவைக்கும் ஒட்டுமொத்த சம்பவமும் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது படுகாயமடைந்த அந்த இளைஞர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, மூன்று குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
