CRIME
“அண்ணே.. என் ஃப்ரெண்டுக்கு 1 ரூபாய் அனுப்புங்க..” நம்பி அனுப்பிய கடைக்காரருக்கு காத்திருந்த ஷாக்..! புத்தகக் கடைக்கு வந்த நபர் செய்த நூதன வேலை.. ஒரே நிமிடத்தில் ரூ.50,000 அவுட்.. பகீர் பின்னணி..!!
புத்தகங்கள் வாங்க வந்தது போல கடைக்குள் நுழைந்த நபர், கடைக்காரரிடம் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி, நூதனமான முறையில் ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் வேம்சூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. புத்தகக் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர், சில புத்தகங்களை வாங்குவதாகக் கூறியுள்ளார். கடைக்காரர் புத்தகங்களை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தபோது, தனது நண்பருக்கு ரூ.1 மட்டும் அனுப்புமாறு அவர் கூறியுள்ளார். அந்தப் பணத்தை நண்பர் உடனடியாகத் திருப்பி அனுப்பிவிடுவார் என்றும் கூறியதை நம்பி கடைக்காரர் பணம் அனுப்பியுள்ளார்.
அப்போது பணப் பரிவர்த்தனைக்காக யுபிஐ பின் எண்ணை பதிவு செய்தபோது, அந்த நபர் அதை கவனித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில புத்தகங்கள் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புத்தகங்களை எடுக்க கடைக்காரரின் மனைவி கடையின் உள்ளே சென்றுள்ளார். அதே நேரத்தில் கடைக்காரரும் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், கௌண்டரில் வைக்கப்பட்டிருந்த கடைக்காரரின் ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் செல்போன் காணாமல் போனதை அறிந்த கடைக்காரர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கிடையே, அந்த நபர் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்த யுபிஐ பின் எண்ணைப் பயன்படுத்தி, கடைக்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து மூன்று பரிவர்த்தனைகளில் மொத்தம் ரூ.50 ஆயிரத்தை எடுத்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் கடைக்காரர் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால், கணக்கில் இருந்த மேலும் ரூ.30 ஆயிரம் பணம் பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சந்தேக நபரின் முகம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செல்போனை எடுத்துச் சென்ற நபரை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, யுபிஐ பின் எண்ணை யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அறிமுகம் இல்லாதவர்கள் கூறும் காரணங்களுக்காக பணப் பரிவர்த்தனை செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
