LATEST NEWS
“அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் சாவு.. இங்க வெறும் 18 பேர்தான் பலி” நான் தான் பெஸ்ட்… முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு அதிபர் ட்ரம்ப் பெருமிதம்..!!
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் நடத்திய போர்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய ஈரான் உடனான இராணுவ மோதலில் அமெரிக்க வீரர்களின் பலி எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் ஈரான் போருக்கான கூடுதல் நிதி கோரப்பட்டு விசாரணை நடந்து வரும் வேளையில், ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் முந்தைய அமெரிக்கப் போர்களின் விவரங்களைப் பட்டியலிட்டு இந்த ஒப்பீட்டை வெளியிட்டுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், 20 ஆண்டுகள் நீடித்த ஆப்கானிஸ்தான் போரில் 2,000 வீரர்களும், 9 ஆண்டுகள் நடந்த ஈராக் போரில் 4,600 வீரர்களும், வியட்நாம் போரில் 58,220 வீரர்களும் பலியாகியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போதைய 4 மாத கால ஈரான் இராணுவ மோதலில் வெறும் 18 அமெரிக்க வீரர்கள் மட்டுமே பலியாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது நிர்வாகத்தின் கீழ் போரின் மனித இழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகத் தற்காத்துப் பேசியுள்ளார். இருப்பினும், வீரர்களின் மரண எண்ணிக்கையை ட்ரம்பின் இந்த அறிக்கை குறைத்து மதிப்பிடுவதாக எதிர்க்கட்சியினர் மற்றும் பல தரப்பினரிடையே விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
