LATEST NEWS
டிராஃபிக் ஜாம் பார்த்திருப்பீங்க… ஆனா காட்டுக்குள்ள இப்படி ஒரு ‘டைகர் ஜாம்’ பார்த்திருக்கீங்களா..? 30 சஃபாரி ஜீப்புகளை நடுரோட்டில் நிக்க வச்ச புலியின் வைரல் வீடியோ..!!
காட்டின் விதிகள் மிகவும் வித்தியாசமானவை; அங்கு காட்டின் ராஜாவே எங்கேனும் நிற்க முடிவெடுத்தால், மற்ற அனைவரும் வழிவிட்டு நிற்கத்தான் வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. பூங்காவிற்குள் சென்று கொண்டிருந்த ஒரு புலி, திடீரென சாலையின் நடுவே படுத்து ஓய்வெடுக்கத் தொடங்கியதால், அதற்குப் பின்னால் வந்த சஃபாரி ஜீப்புகள் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன. காட்டுக்கு நடுவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போன்ற இந்த வித்தியாசமான காட்சி காண்போரைக் கவர்ந்துள்ளது.
வழக்கமாக ஜங்கிள் சஃபாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் புலியை ஒரு நொடியாவது பார்த்துவிட மாட்டோமா என்று பல மணி நேரம் காத்திருப்பார்கள். ஆனால், இம்முறை புலியைக் காண்பதற்குப் பதிலாக, அது வழியை விட்டு விலகும் வரை வாகனத்தை நகர்த்த முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நடுரோட்டில் புலி சாவகாசமாகப் படுத்துக் கொண்டதால், அதன் பின்னால் சுமார் 30 சஃபாரி ஜீப்புகள் வரிசையாக நிற்க வேண்டி வந்தது. ஜீப்பில் இருந்த சுற்றுலாப் பயணிகள் இந்த அபூர்வ நிகழ்வைக் கண்டு வியந்து, தங்களது கேமராக்களில் வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்தனர்.
https://www.instagram.com/reel/DdhD_XoMh0J/?utm_source=ig_web_button_share_sheet
எலேனா என்ற சுற்றுலாப் பயணி இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் தனது கேமராவில் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. “காட்டுப் பாதையில் புலி தனது விருப்பப்படி பிரேக் போட்டு ஓய்வெடுக்கிறது” என்றும், “சாலையை மறித்துப் படுத்திருந்தாலும் சுற்றுப்பயணிகளுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது” என்றும் நெட்டிசன்கள் பல சுவாரசியமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
