LATEST NEWS
அய்யோ கொடுமையே..! பிஞ்சுக் குழந்தைகளை தலைகீழாகத் தொங்கவிட்டு தரையில் தூக்கி வீசிய மாந்திரீகர்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டம்… நெஞ்சை பதற வைக்கும் மூடநம்பிக்கை கொடூரம்..!!
பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவ்பட்டி கிராமத்தில் உள்ள மயான வளாகத்தில், ஷ்ரவன் மஹதோ என்ற மாந்திரீகர் சிகிச்சை அளிப்பதாகக் கூறி பிஞ்சுக் குழந்தைகளை தலைகீழாகத் தொங்கவிட்டு சுழற்றியதுடன், அவர்களைக் கொடூரமாகத் தரையில் தூக்கி வீசியுள்ளார். பேச முடியாத மற்றும் நடக்க முடியாத போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கூறி, கடந்த ஐந்து ஆண்டுகளாக வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயானத்தில் தங்கி இச்செயலை செய்து வந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது 4 முதல் 5 பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகத் தரையில் வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்போது சுற்றிலும் பெரும் திரளான பொதுமக்கள் கூடி நின்று இதைப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, எவருமே மாந்திரீகரின் இந்தக் கொடூரச் செயலைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. இந்த அநீதியான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீவிரமாகப் பரவியது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஷ்ரவன் மீது சிறார் நீதிச் சட்டம் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) 2015 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் சிவம் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய மாந்திரீகரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
