LATEST NEWS
“அய்யயோ.. 16-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை..” அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கிய விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
சீனாவின் புஜியான் மாகாணம், ஜாங்பிங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 16-வது மாடியில் இருந்து தவறி விழுந்து, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தையைத் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்று இக்குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், தாய் தனது மூன்று வயது குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். காலை உணவை முடித்த குழந்தை அசந்து தூங்கிய நேரத்தில், காய்கறி வாங்குவதற்காகத் தாய் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். தாய் வெளியே சென்ற சில நிமிடங்களிலேயே தூக்கத்திலிருந்து விழித்த அந்தச் சுட்டி குழந்தை, வீட்டின் முன்புறம் இருந்த இரும்பு கிராதி கம்பிகளுக்கு இடையே புகுந்து வெளியே செல்ல முயன்றுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாகக் குழந்தை இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கி, 16-வது மாடியின் அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி பயத்தில் அலறியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், குழந்தை அந்தரத்தில் ஆபத்தான நிலையில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்ததுடன், குழந்தையை எப்படியாவது தாங்கிப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறிய நாற்காலியைப் பயன்படுத்தி முயன்றனர். ஆனால், குழந்தை மிக உயரமான இடத்தில் தொங்கிக் கொண்டிருந்ததால், அவர்களால் குழந்தையை நேரடியாக நெருங்கவோ அல்லது பத்திரமாக மீட்கவோ முடியாமல் போனது.
இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அதிவேகமாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பூட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பக்கக் கதவை அதிரடியாக உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். உடனடியாக பால்கனி பகுதிக்குச் சென்ற வீரர்கள், நவீனக் கருவிகள் மூலம் அங்கிருந்த இரும்பு கம்பிகளைப் பாதுகாப்பாக அறுத்து, அந்தரத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர். 16-வது மாடியில் இருந்து குழந்தை கீழே விழுந்துவிடாமல் நூலிழையில் காப்பாற்றப்பட்ட இந்தத் த்ரில்லிங் மீட்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
