LATEST NEWS
மத்திய அமைச்சருக்கு எதிராகப் போராட்டம்.. நடுரோட்டில் தலைவருக்கு நேர்ந்த விபரீதம்…முக்கியப் போராட்டத்தில் நேர்ந்த கொடூரம்…கல்வித்துறையில் வெடித்த புதிய சர்ச்சை…!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயரில் பக்கத்தைத் தொடங்கி, சமூக வலைதளங்களில் பெரும் அலையை ஏற்படுத்தியவர் அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில், அரசியல் நையாண்டிக்காகத் தொடங்கப்பட்ட இந்தப் பக்கம், குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான இளைஞர்களைக் கவர்ந்தது. வெறும் வேடிக்கை பதிவுகளோடு நிறுத்தாமல், நீட் வினாத்தாள் கசிவு, போட்டித் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ முறைகேடுகள் போன்ற கல்வித்துறை சார்ந்த முக்கியப் பிரச்னைகளைக் கையில் எடுத்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த அமைப்பினர் மாநிலம்தோறும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பிரம்மாண்ட போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே வருகை தந்தார். அவர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக மேடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென பாய்ந்து வந்து அவரை ஓங்கி அறைய முயன்று தாக்கினார். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. அபிஜித் தாக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்கள் எங்கும் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியது.
இந்தச் சர்ச்சைச் சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, மிகவும் நிதானமாகவும் அதிரடியாகவும் பதிலளித்துள்ளார். “ஜெய்ப்பூரில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையின் நேரடி விளைவாகும். அந்த நபருக்கு ஒரு நல்ல வேலை இருந்திருந்தால், அவர் நிச்சயமாக இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார். இளைஞர்களுக்குப் பணம் சம்பாதிப்பதற்கு முறையான வழிகள் இல்லாததால், 1,000 முதல் 2,000 ரூபாய் வரை கூலி கொடுத்து இதுபோன்ற செயல்களைச் செய்ய வைக்கிறார்கள். சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்; அத்தகைய இளைஞர்களுக்கு நல்ல வேலைகளை வழங்குமாறு அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். தாக்கப்பட்ட பிறகும் ஆளுங்கட்சியைச் சாடி அவர் பேசியுள்ள இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
