சினிமாக்காரர்களை நம்பி ஏமாறாதீங்க…வாக்கின் மதிப்பு தெரியாமல் ஓட்டுப் போடுகிறீர்களா?…2000 ஆண்டுகளாக தோற்றுக் கொண்டிருக்கும் சமூகம்… மேடையை அதிரவைத்த சாய் தீனாவின் சாட்டையடி பேச்சு…! – cinefeeds
Connect with us

CINEMA

சினிமாக்காரர்களை நம்பி ஏமாறாதீங்க…வாக்கின் மதிப்பு தெரியாமல் ஓட்டுப் போடுகிறீர்களா?…2000 ஆண்டுகளாக தோற்றுக் கொண்டிருக்கும் சமூகம்… மேடையை அதிரவைத்த சாய் தீனாவின் சாட்டையடி பேச்சு…!

Published

on

“நகை மற்றும் பணத்தை விட மனித வாழ்க்கைக்குப் படிப்பே மிக முக்கியமானது. நடிகர்களைப் பார்த்து கைதட்டுவதை நிறுத்திவிட்டு, அரசு அதிகாரிகளைப் பார்த்து அவர்களைப் போல மாற வேண்டும் என நினையுங்கள்” என்று விச்சூர் கிராமத்தில் நடைபெற்ற அம்பேத்கர் இலவச இரவு நேர பாடசாலைத் தொடக்க விழாவில் நடிகர் சாய் தீனா மாணாக்கர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விச்சூரில் இந்த இலவச இரவு நேர பாடசாலையைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், கல்வி மட்டுமே ஒரு சமூகத்தை உயர்த்தும் உன்னத ஆயுதம் என்பதைத் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் வழியே மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய சாய் தீனா, சினிமாக்காரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தமக்குக் கைதட்டக் கூடாது என்றும், ஒரு நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினர் யார், அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கும் பழக்கத்தை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “கருத்தியல் இல்லாத ஒரு சமூகம் கடந்த 2000 ஆண்டுகளாகத் தோற்றுக் கொண்டே இருக்கிறது; நம்மிடம் இருக்கும் ஓட்டையும், கல்வியையும் நாம் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் இன்னும் நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுவோம்” என்று எச்சரித்த அவர், சாதி, மதம் மற்றும் சினிமா ரசிப்புத் தன்மையைப் பார்த்து ஓட்டுப் போடும் தற்போதைய அரசியல் சூழலையும் மிகக் கடுமையாகச் சாடினார்.

Advertisement

தான் படிக்காததால் அடைந்த வலியையும், தனது குடும்பத்தில் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாகக் கல்வி இல்லாததால் ஏற்பட்ட கவலைகளையும் மேடையில் பகிர்ந்துகொண்ட சாய் தீனா, மாணவர்கள் அனைவரும் வெறித்தனமாகப் படித்துப் பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சுமார் 20, 30 வருடங்களுக்கு முன்பு கிராமப்புறங்களில் பரவலாக இருந்த இரவுப் பாடசாலை முறையைத் தான் தற்போது மீண்டும் விச்சூரில் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் இதே போன்ற இரவுப் பாடசாலைகள் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் தம்மால் தொடங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in