ஏசி காத்துல உட்கார்ந்தா மக்கள் கஷ்டம் தெரியுமா…சென்னையில் கொளுத்தும் வெயில்.. நள்ளிரவில் தொடர்ச்சியாக கட் ஆன கரன்ட்…மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்னையின் ‘அந்த’ பகுதி மக்கள்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏசி காத்துல உட்கார்ந்தா மக்கள் கஷ்டம் தெரியுமா…சென்னையில் கொளுத்தும் வெயில்.. நள்ளிரவில் தொடர்ச்சியாக கட் ஆன கரன்ட்…மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்னையின் ‘அந்த’ பகுதி மக்கள்…!

Published

on

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை அம்பத்தூர், ஒரகடம், கள்ளிக்குப்பம், மாதனங்குப்பம், புதூர், மேனாம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஆத்திரமடைந்து நள்ளிரவிலும் குடும்பம் குடும்பமாகச் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டு விடிய விடியப் போராட்டம் நடத்தினர்.

முற்றுகைப் போராட்டத்தின் போது, அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளை நோக்கிப் பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பித் தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தினர். “கடந்த 20 நாட்களாகவே மின் விநியோகம் சீராக இல்லை; நள்ளிரவில் மட்டும் நான்கு முறைக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படித் தூங்குவது?” என்று கொந்தளித்தனர். மேலும், மின் கட்டணத்தைச் சரியாகச் செலுத்தும் தங்களுக்கு தடையற்ற மின்சாரம் பெற உரிமை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், மின் தடை குறித்துப் புகார் அளிக்க மின்வாரிய எண்களைத் தொடர்பு கொண்டால் அதிகாரிகள் யாரும் அழைப்பை ஏற்பதில்லை என்றும், குளிர்சாதன அறைகளில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளுக்குப் பொதுமக்களின் அவதி புரிவதில்லை என்றும் சாடினர்.

Advertisement

இப்போராட்டம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பொதுமக்கள், சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின்சாரம் இல்லாத நேரங்களில் வீட்டிற்குள் இருக்கவே முடிவதில்லை என்று வேதனை தெரிவித்தனர். தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், நள்ளிரவு மின்வெட்டால் குழந்தைகளின் தூக்கமும், படிப்பும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். தெருவிளக்குகள் கூட எரியாத இருண்ட நடுத்தெருவில் தங்களை நிற்க வைத்துள்ள மின்வாரிய அதிகாரிகள், மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதிலளிக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய பொதுமக்கள், இதற்கு அரசு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in