LATEST NEWS
நள்ளிரவில் நடுத்தெருவுக்கு வந்த சென்னை மக்கள்…குழந்தைகள், முதியவர்கள் தவிப்பு…தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இப்படியா…அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு என்னதான் காரணம்? புதிய அரசின் மீது பாயும் மக்கள் புகார்கள்…!
தமிழகத்தின் கூடுவாஞ்சேரி மற்றும் பொன்னேரி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட அறிவிக்கப்படாத நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. பகல் நேரங்களில் மட்டுமின்றி, நள்ளிரவிலும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் ஆரணி பகுதிகளில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசாரிடம், “தினந்தோறும் இதேபோன்று அறிவிக்கப்படாமல் மின்வெட்டு ஏற்படுகிறது; இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்குத் தொடர்பு கொண்டால் முறையான பதிலும் இல்லை, போன்களையும் எடுப்பதில்லை” எனப் பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் போலீசார் பொதுமக்களைச் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியிலும் நேற்று நள்ளிரவில் சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவிலேயே அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். “கடந்த 20 நாட்களாகவே பகல், இரவு எனப் பார்க்காமல் தொடர்ந்து மின்வெட்டு நீடிக்கிறது” என ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
