LATEST NEWS
வங்கி அதிகாரிக்கே இந்த நிலைமையா…? “ஒரே ஒரு மெசேஜை நம்பி ரூ.1.25 கோடியை இழந்த சம்பவம்…. உஷாரா இருங்க மக்களே…!!
புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அள்ள அள்ளக் குறையாத லாபம் சம்பாதிக்கலாம் என்று ஒரு கவர்ச்சிகரமான குறுந்தகவல் வந்துள்ளது. இதனை உண்மை என்று நம்பிய அவர், ஆரம்பத்தில் ஒரு சிறிய தொகையைச் செலுத்திய போது அவருக்குப் பல மடங்கு வருமானம் கிடைப்பது போல் காட்டியுள்ளனர்.
இந்த ஆசையினால் ஈர்க்கப்பட்ட அந்த அதிகாரி, அடுத்தடுத்து சுமார் 20 தவணைகளாக மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரத்தை அந்தப் போலி இணையதளத்தில் முதலீடு செய்துள்ளார். அதன் பின்னர் அவரது கணக்கில் பல கோடி ரூபாய் லாபம் வந்திருப்பதாகத் திரையில் காட்டப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், அந்தப் பெருந்தொகையைத் தனது சொந்த வங்கித் கணக்கிற்கு மாற்ற முயன்ற போதுதான் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. பணத்தை எடுக்க முடியாததால் தான் திட்டமிட்டு மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாகப் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுமட்டுமின்றி, லாஸ்பேட்டை, முதலியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வேறு சில நபர்களிடமும் குறைந்த வட்டிக்குக் கடன் தருவதாகக் கூறியும், போலி லிங்குகளை அனுப்பியும் லட்சக்கணக்கில் ஆன்லைன் பண மோசடிகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்தத் தொடர் மோசடிகள் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
