LATEST NEWS
“முதலமைச்சரை ஒருமையில் பேசாதே..!” முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு தவெக விடுத்த இறுதி எச்சரிக்கை..!!!
முன்னாள் அதிமுக அமைச்சரான செல்லூர் ராஜு, தமிழக முதலமைச்சர் விஜய்யை மேடைகளில் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு தமிழக வெற்றி கழகம் தனது கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் தெரிவிவித்துள்ளது. முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பவருக்கு என்று ஒரு தனி மரியாதை உள்ளதாகவும், மேடைகளில் பேசும்போது அந்த நாகரிகத்தைப் பின்பற்றித்தான் பேச வேண்டும் என்றும் தவெக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செல்லூர் ராஜு தொடர்ந்து இதுபோன்று நாகரிகமற்ற முறையில் முதலமைச்சரை ஒருமையில் பேசினால், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை முற்றுகையிட நேரிடும் என்று தவெகவினர் எச்சரித்துள்ளனர். மேலும், மரியாதை குறைவாகப் பேசிய அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தவெக வழக்கறிஞர்கள் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஏற்கனவே திமுக எம்பி ஆ.ராசா முதலமைச்சரை ஒருமையில் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது அதிமுகவின் செல்லூர் ராஜூவும் அதேபோல முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்துப் பேசியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தையும் பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
