LATEST NEWS
“ரீல்ஸ் அலப்பறை எல்லாம் இங்க வேணாம் .. ஊழல் பண்ணா அடுத்த செகண்டே பதவி அவுட்”.. அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி எச்சடிக்கை..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவிருக்கும் முதல் முழு நிதிநிலை அறிக்கை குறித்த முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி மற்றும் வேளாண் பட்ஜெட்களில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், ஊழல், லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் சரி, எனக்குத் தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாகப் பதவி பறிக்கப்படும் என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக ஆட்சி முற்றிலும் ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கிறேன் என்று யாரும் அலப்பறை செய்யக் கூடாது என்றும் அமைச்சர்களைக் கறாராக எச்சரித்துள்ளார்.
