CINEMA
“அரசியல் இருமுனை கத்தி… அதிகாரம் என் இலக்கு இல்லை”.. நண்பன் முதல்வர் விஜய் அரசியல் குறித்து மாதவன் ஓபன் டாக்..!!
தொழிலதிபர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘G.D.N’ பட விளம்பர நிகழ்ச்சியில், மூத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் நடிகர் மாதவன் சிறப்பு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய மாதவன், “தமிழகத்தில் அரசியல் சூழல் இவ்வளவு வேகமாக மாறும் என்பது சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டு, மக்களுக்கு மாற்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனது நண்பன் விஜய் இன்று ‘முதலமைச்சர் விஜய்’ ஆகியிருப்பதை நான் பெருமையுடன் சொல்கிறேன்” எனத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அதேவேளையில், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். “மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் நமக்குள் இருக்க வேண்டுமே தவிர, அதிகார ஆசையோ, தலைவனாகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆக வேண்டும் என்ற லட்சியமோ எனக்குக் கிடையாது. அந்த வகையில் நான் ஒரு சுயநலவாதி. ‘தம்பி’ திரைப்பட வசனத்தைப் போல, யாருக்கும் தீங்கு செய்யாமல் எனது வேலையைச் சரியாகச் செய்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ்.ரவிகுமார், அரசியல் என்பது நல்லது செய்தாலும் தவறு செய்தாலும் விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும் ஒரு இருமுனை கத்தி எனக் குறிப்பிட்டார்.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘G.D.N’ திரைப்படம், “இந்தியாவின் எடிசன்” என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாகும். இத்திரைப்படத்தில் மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி குறித்துப் பேசிய மாதவன், சிறுவயதில் தன் மடியில் அமர்ந்திருந்த அவர் இன்று வளர்ந்து நிற்கும் விதத்தைப் பார்க்கும்போது பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
