LATEST NEWS
“மோதல் இல்லை… காதல் தான்..!” தவெக – காங்கிரஸ் விரிசல் விவாதங்களுக்குத் திருநாவுக்கரசர் கொடுத்த சுவாரசிய முற்றுப்புள்ளி..!!
தமிழக வெற்றி கழகத்திற்கும், காங்கிரசுக்கும் இடையே இருக்கும் உறவு “மோதல் இல்லை காதல் தான் ” என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் முதலமைச்சர் விஜய்யை இந்தியாவின் ‘நாளைய பிரதமர்’ என்று தொடர்ந்து முழங்கி வரும் நிலையில், இது தவெக மற்றும் காங்கிரஸ் இடையே தலைமைப் போட்டி மற்றும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகப் பரவலான விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய திருநாவுக்கரசர், இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவித மோதலும் கிடையாது என்றும், தவெகவினர் தங்களது தலைவர் விஜய் பிரதமராவார் என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் எதார்த்தமாகப் பேசியுள்ளார்.
இருப்பினும், தங்களது கட்சியின் தேசிய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாகப் பதிவு செய்துள்ள அவர், வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பதில் தங்களுக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தவெகவின் பிரதமர் முழக்கத்தை காங்கிரஸ் மேலிடம் அதிருப்தியுடன் பார்ப்பதாகக் கூறப்பட்ட நிலையில், திருநாவுக்கரசரின் இந்த “மோதல் இல்லை காதல் தான்” என்ற இணக்கமான அறிக்கை தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
