CINEMA
“நான் அன்னைக்கே கணிச்சேன்… இப்ப நடக்குது..!” திரிஷாவின் ஜாதகத்தை உடைத்துப் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி..!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி அளித்த சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தை இயக்கியபோது, அப்படத்தில் நாயகியின் தோழிகளாக நடிக்க அழகான மாணவிகள் தேவைப்பட்டதாகவும், அப்போது சர்ச் பார்க் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த திரிஷா தாரா உமேஷ் மூலமாக படப்பிடிப்பிற்கு வந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். திரிஷாவிற்குப் பெரிய கதாபாத்திரம் கொடுக்க நினைத்தபோது, அவர் சினிமா நல்லதா கெட்டதா என்று தெரிந்துகொள்ளவே வந்ததாகவும், அவருக்கு அப்போது நடிப்பில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திரிஷாவின் தாயாருக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பது குறித்துத் தயக்கம் இருந்ததாகவும், சினிமா துறையைப் புரிந்து கொள்வதற்காகவே திரிஷா படப்பிடிப்பிற்கு வந்தார் என்றும் பிரவீன் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆனால், எதிர்பாராமல் கிடைத்த அந்த வாய்ப்பு திரிஷாவின் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
படப்பிடிப்பின்போது ஜாதகம் கணிக்கும் பழக்கம் கொண்ட பிரவீன் காந்தி, திரிஷாவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவரது தாயாரிடம் ஒரு முக்கிய கணிப்பைக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். திரிஷாவுக்கு இப்போது ஆர்வம் இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நீண்ட காலம் முன்னணி நடிகையாகத் திகழ்வார் எனக் கூறியது அப்படியே நடந்துவிட்டது என்றும், மேலும் அவர் ஒருநாள் முதலமைச்சராகும் அளவுக்கு யோகம் இருக்கிறது என்று தான் கூறியதாகவும் பிரவீன் காந்தி அந்தப் பேட்டியில் புன்னகையுடன் பகிர்ந்துள்ளார்.
