LATEST NEWS
விஜய் அரசுக்கு விசிக கொடுத்த ஷாக்.. அதிமுக எம்.எல்.ஏ-க்களை வளைக்கிறதா தவெக..? எதிர்க்கும் திருமாவளவன்..! மோதலின் பின்னணி என்ன..?!
தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்துள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு தவெகவிற்கு மாறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தவெகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியே இதற்குத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இணைந்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்த கட்சித் தாவல் நடவடிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளை, அதுவும் குறிப்பாகப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்களை தவெகவில் இணைத்துக் கொள்வது அரசியல் அறத்திற்கு அப்பாற்பட்டது என்றும், இதுபோன்ற கட்சித் தாவல்களைத் தவெக தலைமை ஊக்குவிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தூய்மையான அரசியல் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக, பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ பாணியில் எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த எம்.எல்.ஏ.க்களை ஈர்க்கிறது என்ற விமர்சனங்கள் ஏற்கனவே எழுந்துள்ளன. இந்த நிலையில், சொந்தக் கூட்டணியில் இருக்கும் திருமாவளவனுமே இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது முதலமைச்சர் விஜய்க்குப் புதிய தலைவலியாகவும் தர்மசங்கடமாகவும் மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்தே தவெக-விசிக கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
