LATEST NEWS
தோழிகள் கொடுத்த ரகசிய தகவல்… மாப்பிள்ளைக்கு பளார்… ஒரே நொடியில் திருமணத்தை நிறுத்திய புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா பகுதியைச் சேர்ந்த முஸ்கான் பிரதான் என்ற 22 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்த்ராம் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அண்மையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணமகன் வீட்டார் மேளதாளத்துடன் பெண்ணின் வீட்டிற்கு வந்தபோது, காரில் இருந்து இறங்கிய மாப்பிள்ளை அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததால் சரியாக நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியுள்ளார்.
அவரது நண்பர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து அழைத்து வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள், மணமகள் முஸ்கானுக்கு உடனடியாகத் தகவல் கொடுத்துள்ளனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மணமகள், கழுத்தில் மாலையுடன் போதையில் நின்ற மாப்பிள்ளையின் கன்னத்தில் அறைந்து, இவரைத் திருமணம் செய்ய மாட்டேன் என அதிரடியாக அறிவித்துத் திருமணத்தை நிறுத்தினார்.
மணமகளின் இந்தத் துணிச்சலான முடிவைப் பெற்றோரும் ஏற்றுக் கொண்டதால் திருமணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு மோதல் வெடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, குடிப்பழக்கம் உள்ள மணமகனை மேடையிலேயே நிராகரித்த பெண்ணின் தைரியமான முடிவைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஜனமேஜய் மஹோபே, அந்தப் பெண்ணை நேரில் பாராட்டி வாழ்த்தியதுடன், அவரது குடும்பத்திற்குத் தேவையான அரசு உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
