LATEST NEWS
“ஒரு ரூபாய் கூட இல்லை” வரலாற்றில் இதுவே முதல்முறை..! ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க திணறும் CMDA … தமிழக அரசிடம் ரூ.200 கோடி அவசர நிதி கேட்டு அலறல்..!!
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், அதன் கஜானா காலியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கட்டுமான அனுமதி வழங்கும் இந்த முக்கிய அமைப்பு, ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கே தற்போது திணறி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அவசரத் தேவையாக மாநில அரசிடம் சுமார் ரூ.200 கோடி நிதி உதவி மற்றும் மானியத்தை CMDA கோரியுள்ளதாகத் தெரிகிறது.
நூலகங்கள், பேருந்து நிலையங்கள், ‘முதல்வரின் படைப்பகங்கள்’ மற்றும் பிற பொது உள்கட்டமைப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, CMDA தனது சொந்த நிதியிலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிட்டுள்ளது இந்த நிதி நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. திட்ட அனுமதி மூலம் கிடைக்கும் வருவாயை விட, அதிக அளவில் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டதே இந்தத் திடீர் பற்றாக்குறைக்குக் காரணம் என்று மூத்த அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சுமார் ரூ.3,500 கோடி நிதிச் சுமையும், ரூ.1,500 கோடி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடுமையான நிதிச் சுமை காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில முக்கிய திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எந்தத் திட்டங்களை உடனடியாகத் தொடர வேண்டும், எவற்றை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்பது குறித்து தற்பொழுது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த நிதி நெருக்கடி குறித்தோ அல்லது அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது குறித்தோ தமிழக அரசு அல்லது CMDA தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ வெளியிடப்படவில்லை.
