LATEST NEWS
“சேப்பாக்கத்தில் ராஜினாமா பண்ணிட்டு மறுபடியும் நில்லுங்க.. வெல்ல முடியுமா..?!” உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்க சவால்.. சூடுபிடுக்கும் அரசியல் களம்..!!
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி தேர்தல் சவால் விடுத்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி வெற்றி பெற்றதற்கு அங்குள்ள இஸ்லாமியர்களும் காங்கிரஸ் கட்சியினருமே காரணம் எனக் குறிப்பிட்ட அவர், உதயநிதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார் என்றும், தவெக சார்பில் ஒரு சாதாரண பெண்ணை நிறுத்தி, தலைவர் விஜய் ஒரே ஒரு முறை பிரச்சாரம் செய்தாலே அங்கு வெற்றி பெற வைக்க முடியும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் 60 ஆண்டுகால அரசியலை தவெக மாற்றி அமைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இனி திமுக குடும்பத்தில் இருந்து யாரும் முதலமைச்சராக முடியாது என்றும், தவெக தலைவர் விஜய் இருக்கும் வரை திமுகவால் எதுவும் செய்ய முடியாது என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறைகளில் 2028-ஆம் ஆண்டு வரை டெண்டர் விட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கடலில் இருந்து தரையில் போடப்பட்ட மீனைப் போல திமுக இன்னும் சில மாதங்கள் மட்டுமே துள்ளும் எனக் காரசாரமாகப் பேசினார்.
காவிரி விவகாரம் தொடர்பாகப் பேசிய ஆதவ் அர்ஜுனா, இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே சகோதரத்துவத்தை வளர்க்க முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல முடிவு செய்ததாகத் தெரிவித்தார். ஆட்சியைக் கவிழ்த்தாலும் பரவாயில்லை, மூன்று மாதங்களில் தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் இடத்தில் இருந்து கொண்டு உதயநிதி பேசும் பேச்சுக்கள் சரியல்ல என்றும் குற்றம்சாட்டினார்.
