LATEST NEWS
“அந்த ஜான் பிரிட்டோ என் உறவினரே கிடையாது..!” திமுக ஐடி விங் பதிவுக்கு எதிராகக் கொந்தளித்த ஆதவ் அர்ஜூனா… மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்..!!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் செயல்படக்கூடிய திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந் தேதி ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில், “அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ, தற்போது த.வெ.க. அரசின் சிறு தொழில் முகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் நெருங்கிய உறவினர் என அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பதிவு வெளியிட்டு இரண்டு நாட்களில் சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் வரை பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இந்த ஜான் பிரிட்டோ எனக்கு உறவினர் இல்லை. மேலும் பி.ஜான் பிரிட்டோ என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து, அமலாக்கத்துறை சொல்லும் ஜான் பிரிட்டோ நான் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் பதிவு மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தான் இந்த சமூக வலைதளக் கணக்கைப் பராமரித்து வருவதால் இந்த பதிவிற்கு மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பு. எனவே அவதூறு பதிவை வெளியிட்டதற்காக திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலின் இணைந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் அந்தப் பதிவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் ஆஜராகி வாதிட்டார். இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவிற்கு வருகிற செப்டம்பர் 15-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொடர்புக் குழுவிற்கு (ஐடி விங்) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
