CRIME
“என்னை ஏமாத்திட்டுப் போனா உன்னை சும்மா விடமாட்டேன்..!” காதலியைச் சிறைக்கு அனுப்பப் போய் தானே கம்பி எண்ணும் பலே காதலனின் விசித்திரக் கூத்து.. திடுக்கிடும் பிண்ணனி..!!
மகாராஷ்டிராவில் காதலி தன்னை ஏமாற்றிய கோபத்தில், அவளுக்காகத் தான் செய்த மாபெரும் முறைகேட்டை ஒரு காதலனே போலீசில் போட்டுக்கொடுத்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கௌரவ் பாட்டீல் என்ற இளைஞன் தனது காதலியான ருதுஜாவிற்காக, மகாராஷ்டிரா பொதுச்சேவை ஆணையம் நடத்திய மருந்து ஆய்வாளர் தேர்வு வினாத்தாளைத் தேர்வு நடப்பதற்கு முன்பே சட்டவிரோதமாகச் சம்பாதித்துக் கொடுத்துள்ளான். மார்ச் 22 அன்று நடைபெற்ற அந்தத் தேர்வில், அந்த வினாத்தாளின் உதவியுடன் ருதுஜா மாநில அளவில் 7-வது ரேங்க் பெற்று சாதனை படைத்தாள். ஆனால், அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காதலி அவனை பிரிந்து சென்றதால், ஆத்திரமடைந்த கௌரவ், ருதுஜா லீக் ஆன வினாத்தாளை வைத்துதான் தேர்ச்சி பெற்றார் என்று போலீசில் புகார் அளித்து உண்மையை உடைத்தான்.
இந்தத் திடுக்கிடும் புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், வினாத்தாளைப் பல லட்சம் ரூபாய் கொடுத்து லீக் செய்ததே புகார் அளித்த கௌரவ் பாட்டீல் தான் என்பதைக் கண்டுபிடித்தனர். காதலியைப் பாஸ் செய்ய வைக்க கௌரவ் சுமார் 5 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து அந்த வினாத்தாளை வாங்கியதை போலீசார் உறுதி செய்தனர். இதனால், ஏமாற்றிய காதலியைப் பழிவாங்கப் போய் தானே சிக்கிக்கொண்ட காதலன் கௌரவ், தேர்வு வாரியத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் உட்பட மொத்தம் 6 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
