CRIME
“அம்மா தான் கொன்னாங்க சார்” நள்ளிரவில் பெட்ரூமில் நடந்த பயங்கரம்… தூங்கிய தாயின் முகத்தில் கம்பளியை போர்த்தி கொன்ற மகள்.. காட்டிக்கொடுத்த 7 வயது பேரன்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூர் பகுதியில், இன்சூரன்ஸ் பணம் மற்றும் தங்க நகைப் பேராசையால் பெற்ற தாயைக் கொடூரமாகக் கொலை செய்த மகள் மற்றும் மருமகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். கேபின்பேட் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் புஷ்பலதா, தனது முதல் கணவரைப் பிரிந்த பிறகு, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ராஜ்குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது தாயுடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் லட்சுமியின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததால், அந்த விபத்துக்கான இன்சூரன்ஸ் தொகை குடும்பத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் தொகையில் புஷ்பலதா பங்கு கேட்ட நிலையில், லட்சுமி அந்தப் பணத்தைக் கொண்டு அடகு வைக்கப்பட்டிருந்த தனது தங்கச் சங்கிலியை மீட்டுள்ளார். மீட்கப்பட்ட தங்க நகையைத் தனக்குத் தருமாறு புஷ்பலதா கேட்க, அதற்கு லட்சுமி மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புஷ்பலதாவும் அவரது கணவர் ராஜ்குமாரும் சேர்ந்து, நள்ளிரவில் லட்சுமி தூங்கிக் கொண்டிருந்தபோது முகத்தில் கம்பளியைப் போர்த்தி, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பியோடினர்.
இந்த கொடூரக் கொலையை லட்சுமியின் 7 வயது பேரனும், புஷ்பலதாவின் முதல் கணவரின் மகனுமான சிறுவன் நேரில் பார்த்துள்ளான். அந்தச் சிறுவனுக்குப் புதிய சைக்கிள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது எனப் புஷ்பலதாவும் ராஜ்குமாரும் மிரட்டியுள்ளனர். எனினும், லட்சுமியின் மரணம் குறித்துப் போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் விசாரணை நடத்தியபோது, அந்த 7 வயது சிறுவன் நடந்த உண்மைகளைக் கூறி கொலையாளிகளைக் காட்டிக் கொடுத்துள்ளான். சிறுவன் கொடுத்த சாட்சியத்தின் அடிப்படையில் போலீசார் புஷ்பலதா மற்றும் ராஜ்குமாரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
