CRIME
“18 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு… ஜிம் வாசலில் சித்து மூஸ்வாலா பாணியில் கொடூரம்..!” பிரபல பாடகர் அங்கித் பாலியான் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி CCTV காட்சிகள்..! பின்னணியில் பழிக்குப் பழியா..?!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியில் பிரபல ஹரியான்வி பாடகரான அங்கித் பாலியான் ஜிம்மில் இருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு நபர்கள் ஜிம்மை நோக்கி நடந்து சென்று அங்கித் பாலியானை நோக்கி சுமார் 18 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது பதிவாகியுள்ளது. தலையிலும் வயிற்றிலும் ஐந்து தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த ‘கோகி கேங்’ என்ற பிரபல ரவுடி கும்பல் இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. சோனிபட்டைச் சேர்ந்த போலு ஷாபூரியா என்பவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், அங்கித் பாலியான் தங்கள் எதிரி கும்பலுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், தங்கள் கூட்டாளி தொடர்பான பாடலை வெளியிட்டதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்கள் எதிரிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். காவல் துறையினர் இந்த சமூக ஊடகப் பதிவின் உண்மைத்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DckNDlDvill/?utm_source=ig_web_button_share_sheet
ஹரியான்வி இசைத்துறையில் மிகவும் புகழ்பெற்ற அங்கித் பாலியான், “பரி கோர்ட் மே கோலி மாரேங்கே மேரி ஜான்” உள்ளிட்ட பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளார். ஷாம்லியைச் சேர்ந்த இவர், நடைபெறவிருந்த மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஷாம்லி மாவட்டக் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை தீவிரமாக விசாரணை செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
