LATEST NEWS
அடக்கொடுமையே..! ரீல்ஸ் எடுத்ததற்காக சிறுவனை… சுட்டுக்கொன்ற செக்யூரிட்டி..! காசியாபாத்தில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கட்டுமானப் பணியிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் சமீர் என்ற சிறுவன் உயிரிழந்தான். அந்த சிறுவன் அடிக்கடி அந்த கட்டுமானப் பகுதிக்கு வந்து ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. காவலர் அதைத் தடுத்து நிறுத்தியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முதன்மை குற்றவாளியான பாதுகாப்புப் படை காவலரை காவல்துறை கைது செய்துள்ளதோடு, மேலும் இரண்டு காவலர்களையும் விசாரணைக்காகக் காவலில் எடுத்துள்ளது.
இச்சம்பவம் சாகிபாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹிண்டன் பாலம் சௌக்கி பகுதியிலுள்ள அர்தலா பகுதியில் அமைந்துள்ள பாலேஷ்வத் கட்டிட வளாகத்தில் நடந்துள்ளது. அங்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலை அடுத்து காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. விசாரணையில், அங்கிருந்த பாதுகாப்புப் படை காவலர் விவேக் யாதவ் என்பவர் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டதில், நபி அகமது என்பவரின் மகனான சமீர் படுகாயமடைந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி எம்.எம்.ஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு முதன்மை குற்றவாளியை கைது செய்ததுடன், துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட உரிமம் பெற்ற ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சில இளைஞர்கள் அங்கிருந்து இரும்புச் கம்பிகளைத் திருட முயன்றதாகவும், அவர்களைப் பயமுறுத்துவதற்காகவே துப்பாக்கியால் சுட்டதாகவும் காவலர் விவேக் யாதவ் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அப்பகுதியில் அமைதி நிலவி வருகிறது.
