CRIME
5 செகண்ட்… 5 குண்டுகள்..! பேஸ்மென்ட்டில் அமர்ந்திருந்த முன்னாள் கவுன்சிலர் மீது பாய்ந்த தோட்டாக்கள்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில், முன்னாள் வார்டு கவுன்சிலரான அனில் யாதவ் மீது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். பாட்னா மாநகராட்சியின் 24-வது வார்டு முன்னாள் கவுன்சிலரான அனில் யாதவ், புதன் கிழமை மாலையில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் அமர்ந்திருந்தபோது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்களில் இருவர் அவரை நோக்கிச் சில வினாடிகளிலேயே பல முறை துப்பாக்கியால் சுட்டனர். கைகள், அடிவயிறு மற்றும் கால்களில் 4 முதல் 5 குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த அனில் யாதவ், உடனடியாக உத்யான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, புத்தா காலனி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். தாக்குதல் நடத்திய நபர்கள் கைகளில் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அருகிலுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள காரணம் குறித்தும், பழைய பகைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அக்குடியிருப்புப் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அனில் யாதவ்வின் மனைவி ஞானவதி தேவி தற்போது 24-வது வார்டு கவுன்சிலராகப் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்புதான் இவர்களின் மகனும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என்றும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, மருத்துவமனைக்கு நேரில் சென்று அனில் யாதவைச் சந்தித்த ‘ஜன் சுராஜ்’ கட்சியின் பிரசாந்த் கிஷோர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து “ஜங்கிள் ராஜ்” நிலவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
