LATEST NEWS
4 நாட்களில் 3 பயங்கரங்கள்… முதியவர் பலி… வென்டிலேட்டரில் இளைஞர்… வழிவிடாததால் அடிதடி..! தெருக்களில் அலறவிடும் ‘பிளாக் தார்’ அராஜகம்..!!
ஜெய்ப்பூரில் கடந்த 4 நாட்களில் கருப்பு நிற தார் வாகனத்துடன் தொடர்புடைய 3 வெவ்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. செப்டம்பர் 19 அன்று சங்கனேர் பகுதியில் வேகமாக வந்த கருப்பு தார் வாகனம் மோதியதில், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 57 வயதான பால் வியாபாரி நாவல் கிஷோர் சர்மா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் முன்விரோதம் அல்லது சதி இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 நள்ளிரவு ஜவாஹர் நகரில் உணவு டெலிவரி செய்ய ஸ்கூட்டரில் சென்ற விஜய் பாஸ்வான் (24) என்பவரை அதிவேகமாக வந்த தார் வாகனம் மோதியது. மோதியதில் விஜய் சுமார் 15 அடி தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்; தார் வாகனத்தை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த விஜய் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறார். தன் குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்த அவருக்கு நேர்ந்த இந்த விபத்தால் அவரது குடும்பம் பெரும் பொருளாதாரச் சிக்கலில் தவிக்கிறது.
மேலும், செப்டம்பர் 21 அன்று நங்கல் மேம்பாலத்தில் தார் வாகனத்தில் வந்த நபர்கள், வழிவிடவில்லை என்ற காரணத்திற்காக ஒரு கேப் டிரைவரையும் அவரது குடும்பத்தையும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தொடர் சம்பவங்களை அடுத்து ஜெய்ப்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதோடு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, நகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் காச்சரியாவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
