CRIME
பகீர்..!அதிகாலையில் புகுந்த ஆயுதக் கும்பல்… ஒரே நாளில் 4 உயிர்கள் பறிபோன சோகம்.. ‘கருப்பு தினத்தில்’ அரங்கேறிய கொடூரத் தாக்குதல்… குலைநடுங்கும் பின்னணி..!!
மணிப்பூர் மாநிலத்தின் தமேங்லாங் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முதல் சம்பவம் நேற்று காலை 5:30 மணியளவில் கைமாய் காவல் எல்லைக்குட்பட்ட டோலன் கிராமத்தில் நடைபெற்றது. ஆயுதமேந்திய கும்பல் நடத்திய இத்தாக்குதலில் லிங்ஜங்ஐ சிங்சிட் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் சேனே சிங்சிட் மற்றும் 6 வயது மகன் குண்டடிபட்டு பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கணவர் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள 6 வயது சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பிற்பகல் 3 மணியளவில் நுங்பா காவல் எல்லைக்குட்பட்ட லாங்பி கிராமத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இத்தாக்குதலில் ஜிலி சிங்சன் மற்றும் ரியோல் கங்டே என இருவர் கொல்லப்பட்டதாக ‘வெஸ்டர்ன் வில்லேஜ் வாலண்டியர்’ என்ற குக்கி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இத்தாக்குதலில் நாகா கிளர்ச்சி அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாக அது குற்றம் சாட்டியுள்ளது. காவல் நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமத்திற்குச் செல்லும் சாலைகள் மோசமாக இருந்ததால், காவல்துறையினரால் சம்பவ இடத்தை உடனடியாக அடைய முடியவில்லை என்றும், ஆய்வு தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1990களின் நாகா-குக்கி மோதலின் போது உயிரிழந்த 1,000 க்கும் மேற்பட்டவர்களின் நினைவாகக் குக்கி சமூகத்தினர் நேற்று ‘கருப்பு தினமாக’ அனுசரித்த நிலையில், இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
